‘அப்போதுதான் திருமணமான ஒரு பெண்ணாக நான் இந்தியாவிற்கு வந்தபோது, எனக்கு இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அவை அனைத்தையும் அவர்களிடமிருந்தே (ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி) கற்றுக்கொண்டேன். அவர்களது துணிச்சல், அவர்களது இரக்கம், மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்கும் இருந்த கடமை உணர்வு ஆகியவைதான் என்னை ஊக்குவித்தன. கஷ்டங்களும் சந்தேகங்களும் சூழ்ந்த காலங்களில் என்னை உறுதியாக நிற்கச் செய்தன.’

‘பல பத்தாண்டுகளாக மற்றவர்கள் எனது “கதையைச்” சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னுடைய முறை.’ என்று சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தீர்கள். எனது AI தேடலின்படி, உங்கள் கதையை விரிவாகச் சொல்லும், விரிவாகச் சொல்ல முயற்சிசெய்யும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று குறைந்தது 75 நூல்களாவது உள்ளன. உங்கள் கதையை மற்றவர்கள் சொல்லத் துணிந்ததைப் பார்த்து நீங்கள் எரிச்சலோ, கோபமோ அடையாமல், வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டீர்கள் என்பதை உங்களுடைய பதிவு சூசகமாக உணர்த்துகிறது. நான் சொல்வது சரிதானா? உங்கள் ‘கதையைச்’ சொல்வதற்காகப் பல தசாப்தங்களைச் செலவிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களின் ஆசிரியர்களும் பிறரும் எழுதிய அந்தப் புத்தகங்களை, அல்லது அவற்றில் சிலவற்றையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா?

இத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியவே தெரியாது! ஆனால், என்னைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. எங்களைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை வெகு காலத்திற்கு முன்பே நானும் ராஜீவும் உணர்ந்துவிட்டோம். ஆனால், நான் எனது இந்தப் புத்தகத்தில் சொல்லியிருப்பதைப்போல, எனது சொந்தக் கதையை நானே சொல்ல வேண்டும் என்று உணர்ந்த ஒரு தருணம் வந்தது.

Belonging நூலின் முன்னுரையில் ‘ஒருவேளை… பகிர்ந்துகொள்ளத் தகுதியான ஒரு கதையாக இருக்கலாம்’ என்று சற்று அடக்கத்துடன் குறிப்பிட்டு, உங்கள் கதையை எழுதவந்த விதம் குறித்து ஒரு பார்வையைத் தருகிறீர்கள். இந்த அந்தரங்கமான, வழக்கத்திற்கு மாறான வெளிப்படைத் தன்மை கொண்ட கதையை எழுத இறுதியாக உங்களைத் தூண்டியது எது? பல ஆண்டுகளாக உங்களை எழுதச் சொல்லித் துரத்திக்கொண்டிருந்தவர்களின் ‘கூட்டுக் குரலா’, அல்லது உங்களுக்குள் எழுந்த ஏதோ ஒன்றா, அல்லது இரண்டுமா? இந்த புத்தகத்தை எழுத உங்களுக்கு எவ்வளவு காலம் பிடித்தது?

மிக நீண்ட காலமாக எழுதிவந்தேன் என்பதால், எவ்வளவு நாட்கள் என்பதை நான் மறந்துவிட்டேன், ஆனால், நான் முதன்முதலில் எழுத ஆரம்பித்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது என்பதை உறுதியாகச் சொல்லலாம். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். அதனைத் தொடர்ச்சியாகச் செய்யவில்லை. சில நேரங்களில் வார்த்தைகளும் எண்ணங்களும் தடையின்றிப் பாய்ந்தன. சில நேரங்களில் எதுவுமே எழுதத் தோன்றாது. அப்போது, விரக்தியில் எழுதுவதை நிறுத்திவிடுவேன்.

Belonging நூலை ஒரு தனிப்பட்ட நினைவலையாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அரசியல் என்பது இதற்கு ஒரு பின்னணியாக அல்லது சட்டகமாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால், இந்தப் புத்தகம் அடிப்படையில் ஒரு காதல் கதை. இதை நான் அப்படித்தான் பார்க்கிறேன். ராஜீவிற்கும் சோனியாவுக்கும் இடையே உடனடியாக உருவான அசாதாரணமான அன்பின் பிணைப்பு, படிப்படியாக மிகப் பெரிய ஒன்றாக வளர்ந்து, உங்களை அதிகாரத்தின் வட்டங்களுக்குள் இழுத்து, பின்னர் தயக்கத்துடன் பொது வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் கொண்டுவந்து, இறுதியில் நாட்டின் முதன்மையான அரசியல் தலைவர்களில் ஒருவராக உங்களை மாற்றிய கதை. இது கற்பனையை விட விசித்திரமாக இருக்கிறது அல்லவா?

ஆம்! இவ்வளவு காலம் இதைப் பற்றிப் பேச எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் கதை மட்டுமல்ல. ராஜீவின் குடும்பத்தையும், அவர்களது நாட்டையும் எப்படி நேசிக்க ஆரம்பித்தேன், பின்னர் நானும் அதில் ஒருத்தியாக எப்படி மாறினேன் என்பது பற்றிய கதையும்தான். அவர்கள் எதற்காக தியாகம் செய்தார்களோ அந்த நோக்கமே அச்சுறுத்தலுக்குள்ளானபோது, கட்சி பலவீனமடைவதை பார்த்தபோது, இந்த காதல் என்னை எப்படி பொது வாழ்க்கைக்குக் கொண்டுவந்தது என்பதைச் சொல்லும் கதையும்தான். அந்தத் தருணத்தில் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

காலம் போய்க்கொண்டே இருந்தாலும் வயதானாலும், ‘உள்ளே இருக்கும் மனிதன் அப்படியேதான் இருக்கிறான்’ என்று எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டார். ஒருவரது சுயம் மாறவே மாறாது என்பதைக் குறிப்பிட அவர் இப்படிச் சொன்னார். பிற்காலத்தில் நீங்கள் வாழ்ந்து, பழகிக்கொண்ட உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு குடும்ப, சமூகச் சூழலில் இத்தாலியின் ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவர் நீங்கள். இந்தியாவில் உங்களுடைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அந்த இளம் இத்தாலியப் பெண், இப்போது உங்களிடம் எந்த அளவிற்கு எஞ்சியிருக்கிறாள்?

நான் வளரும்போது கற்றுக்கொண்ட மதிப்பீடுகள் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் விசுவாசமாக இருப்பது, நேர்மையாக இருப்பது, பிறர் மீது அக்கறைகாட்டுவது, கடமையுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் என என்னால் முடிந்தவரை இந்த மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்திருக்கிறேன். இந்த விஷயங்களைப் பொறுத்தவரை, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் சந்தித்த அதே நபராகவே நான் இப்போதும் இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அப்போதெல்லாம் நான் இதைவிட அதிகமாகச் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன்!

உங்கள் வாழ்வின் காதலாக இருந்த ராஜீவ் காந்தியும், நீங்கள் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த இந்திரா காந்தியும் உங்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள். திரும்பிப் பார்க்கும்போது, அவர்களின் தனித்துவமான குணங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையையும் கண்ணோட்டத்தையும் எந்தெந்த வழிகளில் வடிவமைத்தார்கள் என்று சொல்ல முடியுமா?

ஒரு இளம் மணப்பெண்ணாக நான் இந்தியாவிற்கு வந்தபோது, எனக்கு இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அவை அனைத்தையும் அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவர்களின் துணிச்சல், அவர்களது இரக்கம், மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்கும் இருந்த கடமை உணர்வு ஆகியவை என்னை ஊக்குவித்தன. கஷ்டங்களும் சந்தேகங்களும் சூழ்ந்த காலங்களில் என்னை உறுதியாக இருக்கச் செய்தன.

சஞ்சய் காந்தியின் பெயர் நெருக்கடி நிலைக்கு இணையான பெயராக மாறிவிட்டதாகவும், தான் கேள்விப்பட்ட புகார்களையும் கருத்துகளையும் ராஜீவ் தனது தாயிடம் தெரிவிப்பார் என்றும், ஆனால் இந்திராவிடமிருந்து எந்தப் பதிலும் வந்ததில்லை என்றும் எழுதியிருக்கிறீர்கள். தனது மூத்த மகன் சொன்னதையும் தாம் கேட்டவை, அனுபவித்தவை, கவனித்தவை குறித்து நேர்மையாக இருந்த மற்றவர்கள் கூறியதையும் கேட்டிருந்தால், நெருக்கடி காலத்தின் ‘அத்துமீறல்களை’ இந்திரா காந்தி தவிர்த்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

பொதுமக்களின் மனதில் சஞ்சய், நெருக்கடி நிலையோடு இணைத்துப் பார்க்கப்பட்டாலும், அவர் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. இந்திரா காந்தியின் மூத்த சகாக்கள் சிலரிடமிருந்து அதிக அழுத்தம் இருந்தது. மேலும், மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ராஜீவைப் போன்ற வெகு சிலரே இந்திராவைச் சுற்றி இருந்தனர் என்று நினைக்கிறேன். இறுதியில் என் மாமியார் தனது சொந்த விவேகத்தின் மூலம் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் என்றே கருதுகிறேன்.

நான் வாழ்ந்து, எதிர்த்து நின்ற நெருக்கடி நிலை என்பது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மறுக்கமுடியாத ஒரு இருண்ட அத்தியாயம். அதிர்ஷ்டவசமாக, பல சிக்கலான காரணங்களால் அது குறுகிய காலமே நீடித்தது. புத்தகத்தில் நெருக்கடி நிலையைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். ராஜீவைப் போலவே அக்காலத்தில் நடந்த பல விஷயங்களை நீங்களும் ஏற்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனை ‘அத்துமீறல்கள்’ நிறைந்த, அதிகமாக மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இருந்த காலகட்டம் என்று சொல்வதைவிட, ஜனநாயக விரோத, சர்வாதிகார அத்தியாயமாக அங்கீகரிப்பது சரியாக இருக்காதா?

நெருக்கடி நிலைக்குப் பிறகுதான் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதன் உண்மையான தீவிரத்தை நான் அறிந்துகொண்டேன். ஆம், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன, ‘ஹேபியஸ் கார்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு உரிமையும் இடைநிறுத்தப்பட்டது. ஆனால், அது அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டது. இருந்தபோதும், அக்காலகட்டத்திற்கு என்னை மீண்டும் கொண்டு சென்று, திருமதி காந்தியின் பார்வையில் இருந்து அந்தக் காலகட்டத்தைப் பார்க்க முயற்சிக்கும்போது, வேகமாக மோசமடைந்து வந்த அன்றைய சூழல்களைச் சமாளிக்க அவர் திணறியதை என்னால் பார்க்க முடிகிறது. வன்முறை நிறைந்த போராட்டங்கள், அரசு அலுவலகங்களும் அரசுப் போக்குவரத்துத் துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது, பரவலான திட்டமிடப்பட்ட அமைதியின்மை, அரசு அதிகாரிகளும் ஆயுதப் படைகளும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று அழைப்பு விடுப்பதுவரை நடந்தது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது விஷயங்களைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள உதவுகிறது. என்ன நடக்கிறது என்பதைத் தானாகவே உணர்ந்து 1977ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தவர் திருமதி காந்திதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும், நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்களுக்காக அவர் பின்னர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்க பரிவாரங்கள் குறித்தும், அவர்கள் இந்தியாவின் சமூகத்திற்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும், குறிப்பாக ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகளுக்கும் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்தும் உங்கள் புத்தகத்தில் உள்ள சில பகுதிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஆழமான பார்வையுடன் கூடியவை. நீங்கள் முக்கியமாகக் கருதும் இந்த அடிப்படையான விவகாரங்களில், வரலாற்று ரீதியாகவும் சரி, சமீப காலங்களிலும் சரி, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத்துவ சக்திகளிடமிருந்து காங்கிரஸ் தன்னைத் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும், திறம்படவும் வேறுபடுத்தி கொண்டிருக்கிறது என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக! மதச்சார்பின்மை விவகாரத்தில் நாம் அவ்வளவு கறாராக இருக்கக்கூடாது என்று கட்சிக்குள் சிலர் கருதினார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது கட்சியின் நிலைப்பாடு அல்ல. எங்களது கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும், நமது நாட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தத்தமது மதத்தையும் நம்பிக்கையையும் வழிபடவும் பின்பற்றவும் உள்ள அரசமைப்புச் சட்ட உரிமையின் பக்கம் நாங்கள் உறுதியாக நின்றிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி எழுதும்போது, நீங்களும் அவரும் வெவ்வேறு கருத்தியல் உலகங்களிலிருந்து வந்தவர்கள் என்றும், இருவருக்கும் இந்தியா குறித்து மிகவும் மாறுபட்ட பார்வைகள் உள்ளன என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருந்தபோதும், ஆளும் உயர் வர்க்கம் குறித்து அவருக்கு இருக்கும் அசௌகரியத்தையும் நீங்கள் ஓரளவுக்கு அங்கீகரிக்கிறீர்கள். புத்தகத்தின் ஒரு முக்கியமான பகுதியில், தில்லியில் செல்வாக்கு மிக்கவர்களின் வரவேற்பறைகளில் பேசப்படும் அரசியல் கருத்துக்கள் ‘இந்தியாவின் யதார்த்தத்திற்குப் பொருந்தாத’ வகையில் இருப்பதை உணர்ந்து, நீங்கள் சங்கடப்பட்டதையும் நினைவுகூர்கிறீர்கள். உங்கள் தொகுதியிலும் நாடு முழுவதிலும் நீங்கள் கண்ட மக்களின் துயரங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இந்த சலுகைபெற்ற பிரிவினரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. மோதியின் எளிய பின்னணி குறித்து அவரது விளம்பரக் குழுவினரால் மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், அவர் “ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள் ஒரு பின்தங்கிய உலகத்திலிருந்து அதிகாரத்திற்கான தனது வழியை உழைத்து, உருவாக்கிக்கொண்டார்” என்றும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதிலிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பாடம் என்ன?

அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்த உலகத்திலிருந்து வந்தவர் என்பது உண்மைதான். ஆனால் அரசியலில் மக்கள் வெற்றிபெற பல வழிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குளேயே டாக்டர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

காங்கிரஸ் தலைவர்களான சரத் பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் நீங்கள் வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்சினையை எழுப்பியதும், இந்தியாவில் நீங்கள் உயர் பதவிகளை வகிக்க முடியாது என்று கூறியதும் உங்களுக்கு ஏற்படுத்திய மனவேதனையைப் பதிவு செய்திருக்கிறீர்கள். ‘கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, நான் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற நான் அரசியலுக்கு வரவில்லை. இந்தக் கட்சிக்காரர்களில் சிலர்தான் என்னை அரசியலில் இணையுமாறு வலியுறுத்தினார்கள். இப்போது அவர்களே எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்… பதவி வகிப்பது பற்றிய பிரச்சினை என்னை காயப்படுத்தவில்லை. இந்தியாவின் மீதான எனது விசுவாசம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதுதான் என்னை காயப்படுத்தியது.’ நீங்கள் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தீர்கள், ஆனால், நீங்களே தொடரும்படி கட்சித் தலைவர்கள் உங்களை சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவம், பிற்காலத்தில் வாய்ப்பு வந்தாலும் பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்று உங்களை உறுதிப்படுத்தியதா?

நிச்சயமாக, நான் மனவேதனை அடைந்தேன். அவர்கள் என் சகாக்கள், என் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்பது வெளிப்பட்டது. அவர்கள் என்னை இன்னமும் ஒரு வெளியாளாகவே பார்க்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னோக்கிப் பார்க்கும்போது, அவர்களுக்கான காரணங்கள் இருந்திருக்கலாம் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அது எனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டம். அப்போது, பிரதமர் பதவி என்பது என் சிந்தனைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. நான் ராஜினாமா செய்தேன் என்பது உண்மைதான். ஆனால், சில ஆத்ம பரிசோதனைகளுக்குப் பிறகு, என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள், பெரிய இலக்குகளில் இருந்து என்னைத் திசைதிருப்ப நான் அனுமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன். நான் தொடர வேண்டியிருந்தது.

இந்த நூலில் முப்பதாவது அத்தியாயம், அரசியல் ரீதியாக மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெகிழ்ச்சியான அத்தியாயங்களில் ஒன்றாகவும் இருக்கிறது என்று சொல்லலாம். 2004ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எல்லோருமே நீங்கள் பிரதமராகப் பொறுப்பேற்பீர்கள் என்று எதிர்பார்த்த போது, பிரதமர் ஆக வேண்டாம் என்று நீங்கள் எடுத்த முடிவு குறித்த புதிய பார்வைகளை அது வழங்குகிறது. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் வெற்றிபெற்றால் பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்று உங்கள் குழந்தைகளில் ஒருவர் கேட்டபோது, “நிச்சயமாக ஏற்க மாட்டேன்” என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். பாட்டியும் தந்தையும் படுகொலை செய்யப்பட்டதால் உறைந்துபோய், இந்தப் பதவி மிக அதிகமான ஆபத்தைக் கொண்டது என்று நம்பிய ராகுலும் பிரியங்காவும் பிரதமர் பதவியை நீங்கள் ஏற்பதற்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், நீங்கள் பிரதமர் பதவியை ஏற்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் உங்களை வற்புறுத்திய அந்த ‘யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நாடகத்தின்’போது, நீங்கள் ‘டீக் ஹை’ (சரி) என்று ஒப்புக்கொண்டீர்கள். பிறகு உங்கள் மனதை மாற்றிக்கொண்டீர்கள். உங்களுக்குப் பதிலாக டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானார். நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றிருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளும் காங்கிரஸ் வியூகமும் எவ்வாறு மாறியிருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதை நான் கேட்பதற்குக் காரணம், அன்றைக்கும் இன்றைக்கும் டாக்டர் மன்மோகன் சிங்கைவிடவும் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை விடவும் நீங்கள் ஒரு சமூக ஜனநாயகவாதியாகவே (social democrat) பரவலாகப் பார்க்கப்படுகிறீர்கள்.

இல்லவே இல்லை. அது என் மனதில் தோன்றியதே இல்லை. எங்கள் அனுபவம் ஒட்டுமொத்தமாக மிகவும் ஆக்கப்பூர்வமான ஒன்றாகவே இருந்தது. நாங்கள் ஒரு குழுவாகப் பணியாற்றினோம். அவர் அரசாங்கத்தை வழிநடத்த, நான் கட்சியை வழிநடத்த என எங்கள் இருவரின் பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன.

இந்தியாவிற்கு வந்து, நீங்கள் திருமணம் செய்துகொண்ட கணவரின் குடும்பத்துடன் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதில் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த வருத்தமும் இல்லை என்பதை நூலின் முடிவுரையில் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். மேலும், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தலைவரானபோது, ‘வாழ்க்கை கற்பனை செய்ய முடியாத பணிகளைச் செய்ய அழைக்கும்போது, மனிதர்களிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத ஆற்றல்கள் வெளிப்படுகின்றன’ என்பதைக் கண்டறிந்ததாகக் கூறி நம்பிக்கையான ஒரு கருத்தையும் முன்வைக்கிறீர்கள். இருந்தாலும், அரசியல் சமரசங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது நீங்கள் சந்தேகங்களுடன் போராடியதாக எழுதுகிறீர்கள். ‘அந்த சமரசங்கள் அவற்றின் நோக்கங்களை நிறைவேற்றினவா என்று இப்போது என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஒருபோதும் நிறைவேற்றவில்லை. அவை கட்சிக்குச் சாதகமாகத் தெரிந்தாலும்கூட, என்னால் உள்ளூர மகிழ்ச்சியடைய முடியவில்லை. அவை இன்னமும் என் மனசாட்சியில் பாரமாகவே உள்ளன’ என்று எழுதியிருக்கிறீர்கள். அந்த சமரசங்கள் என்ன? ஓரிரு உதாரணங்களைத் தர முடியுமா?

யதார்த்தமாகப் பார்ப்போம், அரசியலில் சமரசங்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாதவை. சில நேரங்களில் நாங்கள் கடினமான அரசியல் தேர்வுகளை எதிர்கொண்டோம். எங்கள் அரசியல் சித்தாந்தத்தை கொண்டிருக்காத சிலருடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது என் மனதில் ஒருபோதும் அமைதியைத் தரவில்லை. ஆனால், நான் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறேன்: நாங்கள் பா.ஜ.கவுடனும் ஆர்.எஸ்.எஸ்சுடனும் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை, இனியும் செய்ய மாட்டோம்.

‘சர்வாதிகார ஆட்சிகளில் உள்ள இரக்கமற்றதன்மை, தங்களுடன் முரண்படுபவர்களை துன்புறுத்துகிறது, சிறுமைப்படுத்துகிறது’ என்றுகூறி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற அரசியலிலும் பொது வாழ்விலும் கண்ணியமும் நற்பண்புகளும் இல்லாமல் போயிருப்பதை நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள். 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டால், நிலைமை மாறும் என்றும் அரசியல் என்பது மறுபடியும் கொள்கைகளைப் பற்றிய, திட்டங்களைப் பற்றிய போட்டியாக மாறும் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா?

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நமது நாட்டின் கட்டமைப்புக்கும், நமது ஜனநாயகத்திற்கும், நமது அரசு அமைப்புகளுக்கும் பெரும் சேதம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசு அகன்ற பிறகும் கூட, நமது அமைப்புகளை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவர கால அவகாசமும், அரசியல் கட்சிகளின் பெரும் முயற்சியும் தேவைப்படும். மக்கள் இப்போது அமைதியிழக்கத் தொடங்கிவிட்டனர். சேதத்தை உணரத் தொடங்கியுள்ளனர். ஆனால், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். சரியான நிர்வாகத்திற்கு நாடு திரும்புவதை இந்திய மக்கள் வரவேற்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அரசியல் கட்சியாக இருந்த காங்கிரஸ், வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்பது ஒரு அரசியல் உண்மை. கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்துத்துவ சக்திகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் போராடி வருகிறது. 2004க்கும் 2014க்கும் இடையில் ஓரளவு வளர்ச்சி காணப்பட்டாலும், வீழ்ச்சியடையும் போக்கை கட்சியால் மாற்றியமைக்க முடியவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் புத்தகத்தில் காங்கிரஸைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். காங்கிரசின் தற்போதைய நிலைமையையும் எதிர்கால வாய்ப்புகளையும் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

நான் அவ்வளவு அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இந்த அரசு பதவிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சமமான களம் கிடைக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அனைத்து அமைப்புகளின் மீதும், குறிப்பாகத் தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் வைத்துள்ள முழுமையான பிடி, பிரதான ஊடகங்களின் மீதான அவர்களின் கட்டுப்பாடு, அவர்களின் பணபலம், மதத்தை அவர்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பாருங்கள். இருந்தபோதும், எங்களது கட்சி தொடர்ந்து போராடி, முன்னேறி வருகிறது. சொல்லப்போனால், இந்தத் தாக்குதலைத் தாங்கி நிற்கும் மனவுறுதி கொண்ட ஒரே கட்சியாக இந்தக் கட்சிதான் இருக்கிறது. எங்களுடைய தொண்டர்களும் தலைவர்களும் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இருந்தபோதும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் நமது அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்திய மாதங்களில் பல தேர்தல்கள் களவு போயுள்ளன என்பது போதுமான அளவிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இப்போது அதைப் பற்றி அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் எங்களின் எதிர்கால வாய்ப்புகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான வாசகர்களைக் கவரும் என்று உறுதியாக நம்பப்படக்கூடிய ஒரு புத்தகம், அது வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பதிப்பகத்தை மாற்றுவது அசாதாரணமானது. ஆகஸ்ட் 2026ன் பிற்பகுதியில், ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ நிறுவனம் ‘Belonging: A Journey of Love’ புத்தகத்தை இனி வெளியிடாது என்பது தெரியவந்தது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில், ‘ஹார்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் நவம்பர் 10ஆம் தேதியன்று இதை வெளியிடப்போவதாக அறிவித்தது. இந்த மாற்றம் பலவிதமான யூகங்களைத் தூண்டியது. நரேந்திர மோதி, ஆர்.எஸ்.எஸ்., மதரீதியான பதற்றங்கள், சிறுபான்மையினர், கல்வான் உள்ளிட்ட சீனாவுடனான இந்தியாவின் மோதல் தொடர்பான பகுதிகள் குறித்த கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்று ஒரு செய்தித்தாள் செய்தி குறிப்பிட்டது. கையெழுத்துப் பிரதி மீதான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து உங்கள் குழுவே புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்ததாக பென்குயின் நிறுவனம் கூறியது. அந்தத் தகவல் சரியானதா? இது புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மீதான கருத்து வேறுபாடா, அல்லது ஒரு எழுத்தாளரின் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பெரிய கேள்விகள் இதில் அடங்கியிருக்கின்றனவா?

இம்மாதிரி சர்ச்சைகளில் ஈடுபடுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை.

N Ram x Sonia Gandhi | Belonging A Journey of Love | Final Version | Video Credit: The Hindu

Source: The Hindu · N. Ram

At a glance

Topic
World
Country
🇮🇳 IN
Publisher language
EN
Added to Allnira